Wednesday, July 8, 2020

என்சிறுக்கண்ணன்.......



என்சிறுக்கண்ணன் என்னகம் புகுந்தமையால் என்னகங்காரம்  இழந்து மனமாயை தானும் ஒழிந்து அவன் நினைவாய் நிற்கின்றேன்! என்சொல்வேன் மணிவண்ணன் பெருமைகள்!

பாலும் தேனும் வெண்ணை தயிர் எல்லாம் எனக்காய் நான் உண்ணும் நேரம் என் சிறு  கண்ணன் என்னப்பன் மணிவண்ணன் தனக்களித்து உண்ணவேண்டும் என்னும் எண்ணம் மிகுதியால் நெய் உண்ணேன் ! பாலும் உண்ணேன் !
என் சொல்வேன் என் தாமோதரன் பெருமைகள்!

கனவும் நினைவும் உறக்கமும் தாண்டி நான்காம் நிலையாம் பரிசுத்த போதத்தை தந்திடுவான் என் கண்ணன்! என் சொல்வேன் என்னப்பன் திரிவிக்கிரமன் பெருமைகள்!

பெரும் பேறு செய்திட்டான் காளிங்கன்! மணிவண்ணன் திருப்பாதங்கள் தன சென்னியில் பதிந்திட! என்னசொல்வேனோ அவன் பெருமை என்னப்பன் பற்பநாபன் பெருமைகள்!

கண்ணன் கேசவன் நாரணன் என்றும் பல பல நாமம் சொல்லி என் சிறுக்கண்ணை கொண்டாடி மகிழ்ந்திடுவேன்! இணக்கம் புகுத்தென்னை பரிசுத்தனாய் ஆக்கின கண்ணன் பெருமைகள் என்னசொல்வேனோ!

உலகங்கள் மூன்றும் உண்டுமிழ்ந்து உய்யும் என் சிருக்கண்ணன் கோவலனாய் விளையாடி பார்த்தனுக்கு தேரோட்டி லீலைகள் பல செய்து விளையாடி என்னகம் புகுந்தான்! என்னசொல்வேனோ அந்த குருபவனபுரத்துக் கண்ணன் லீலைகள்!