ஆவணி / புரட்டாசி மாசம் (பாத்ரபத) வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தி (ஸுக்ல சதுர்த்தி) அன்று செய்யப் படும் வ்ருதம் தான் இந்த விநாயகர் பூஜை. இதற்கு சிறப்பாக வர சித்தி விநாயகர் பூஜை என்று சொல்லப் படுகின்றது. அதாவது, வேனிற்காலம் முடிந்து, மழைக் காலம் துடங்கும் பொழுது , குளிர் / பனிக் காலம் வருவதற்கு முன்பு, இந்த வ்ருதம் அனுஷ்டிக்கப் படுகின்றது.
நாம் வருடம் முழுவதும் செய்யும் மற்ற வ்ருதங்களுக்கும் இந்த பூசைக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்திப் பூசையிலே, பச்சை களி மண்ணால், செய்த திருவுருவத்தில் விநாயகப் பெருமானை, எழுந்தருளச்செய்து, 21 விதமான மலர்களையும், இலைகளையும் சமர்ப்பித்து , அதன் பிறகு அடுத்த நாள் (பஞ்சமி) , அந்த களிமண் சிலையை அருகே உள்ள நதியிலோ ஆற்றிலோ விடுவது (விசர்ஜனம்) நம்முடைய சம்ப்ரதாயம்.
கிணறு, குளம் மற்றும் ஆறுகளில் உள்ள நீர் சுத்தம் அடைவதற்கும், கிருமிகள் அழிவதற்கும் இந்த இலைகள் மிகவும் துணை புரிகின்றன. நோய்கள் வந்த பிறகு மருத்துவம் செய்வதை விட, வருமுன் காதலே நன்று என்னும் வகையில் தடுப்பு மருந்து கொண்ட மூலிகைகளை, பருகும் நீரை கொண்டு நீர் நிலைகளில் கரைத்து விடுவது நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தந்த அரியதொரு விஷயம்.
அந்த 21 இலைகள் என்ன என்று இங்கே பார்த்து கொள்ளுங்கள்:
http://srimaniv-flowers.blogspot.com/2012/02/eka-dhvim-shathi-21-leaves-for-ganesh.html
அதே போல், 21 பூக்கள் என்ன என்பதை இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்:
http://srimaniv-flowers.blogspot.com/2012/12/21-flowers-for-ganesh-puja.html
அந்தப் பச்சிலைகள் எல்லாம் கிடைக்கா விட்டால் அருகம் புல்லை கொண்டு இந்தப் பூஜையை எளிமையாகச் செய்து விடலாம். விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை மற்றும் முக்கனி மற்றும் விளம் பழம் ஆகியவை கிடைக்குமாமயின் மிகவும் நன்று.
செயற்க்கைச் சாயம் பூசிய பொம்மைகளை ஆற்றில் காரைக்காதீர்
நம்முடைய கலாச்சாரத்தில், சமுதாயத்தில் எல்லா மரபினருக்கும் உரிய பங்கு மற்றும் பெருமை உண்டு. குயவர்கள் மண் பானை மற்றும் மண்ணால் ஆன பொம்மைகளை செய்வதில் வல்லவர்கள். அதாவது , பிரம தேவனைப் போன்று அவர்கள் உருவாக்கும் தொழில் செய்வதனால் அவர்களை விஸ்வகர்மா அல்லது விஸ்வ பிராம்மணர்கள் என்று கூறுவார்கள். ஆசாரி , இரும்பு வேலை செய்யும் கொல்லன், தட்டான், குயவன்,கொத்தனார் - இந்த ஐந்து தொழில்களும் புனிதத் தன்மை வாய்ந்தன என்பது நம் தமிழர்களின் நம்பிக்கை. பிறப்பு, இறப்பு, திருமண, திருவிழா என்று எல்லா நேரத்திலும் மிகவும் முக்கியமான பங்கு குயவர்களுக்கு உண்டு. இந்த விநாயக சதுர்த்திக்கு பச்சைக் களிமண்ணால், விநாயகர் சிலைகளை செய்து தருவதில் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இயற்கையான களிமண்ணால் அல்லாத விநாயகர் சிலைகளை வாங்குவதாலோ, கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பதில் நம்முடைய அந்தரிக்ஷம் மாசு படும் என்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே அப்படி பச்சைக் களிமண் பொம்மைகள் கிடைக்க விட்டால் , நாமே செய்து கொள்ளலாம் (சுத்தமான களிமண்ணைக் கொண்டு).
திருப்புகழில் விநாயகப் பெருமானின் பாடல்கள்
பொதுவாக விநாயகர் பாடல்களை நாட்டை (தமிழ் பண்) என்னும் ராகத்தில் படுவது நம் மரபு. சங்கீதம் தேறிய விட்டால், வெறுமனே படித்தாலும் போதும். அருணா கிரி நாதர் அருளிய திருப்புகழில் முதல் மூன்று பாடல்கள்:
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
வி: தன்னுடைய கைகளில் நிறையக் கூடிய அளவில் உள்ள கனி (வினைத்தொகையாக இருப்பதால் எடுத்து தின்று கொண்டே இருக்கும் என்று பொருள் கொள்ளலாம்)வகைகள் மற்றும் அப்பம், பொரி ஆகியவற்றை அன்புடன் உண்ணும் யானை முகம் கொண்ட விநாயகனை, எல்லா வரமும் தரும் கற்பக மரம் என்று எண்ணி கொண்டு பக்தி பண்ணினால், எல்லா விதமான ஊழ்வினைகளும் அகன்று விடும். அப்படிப்பட்ட விநாயகர், மறை நூல்களை கற்றிடும் அன்பர்களது நெஞ்சில் நீங்காது இருப்பவர் என்று அருணகிரிநாதர் இங்கு விநாயகப் பெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறார். கேட்டவருக்கு கேட்ட படி வரம் அருளும் கற்பகத தரு போன்றவர் விநயகர் என்பது இந்த வரிகளின் உட்கருத்து.
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
ஊமத்தம் மலர்களையும், நிலவையும் அணிந்த சடையை உள்ள சிவனாரின் மகன், மத்தளத்தை ஒத்த வயிறை உடையவன், உத்தமியாகிய உமையின் மகன், மல்லியுத்தம் செய்தற்கு ஏற்ற நல்ல திரண்டு விளங்கும் புஜங்களை உடையவன் ஆகிய விநாயகப் பெருமானை தேன் ஊரும் புதிய மலர்களைக் கொண்டு பூசை செய்வேன் என்று வணங்குகிறார் . முழுமுதற்க் கடவுளாகிய வினையாகப் பெருமான் பார்வதி மற்றும் பரமேஸ்வரனின் குழந்தை என்று இந்த வரிகள் சிறப்பிக்கின்றன.
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
வி: மகா மேரு மலையிலே இயல்,இசை,நாடகம் என்று முத்தமிழ்களையும் தன்னுடைய தந்ததினால் எழுதிய பெருமை கொண்டவனே என்றும், விநாயகர் வணக்கம் செய்யாமல் சென்றமைக்காக திரிபுர ஸம்ஹரம் செய்ய சென்ற சிவ பெருமானுடைய ரத்தத்தின் அச்சை பொடி செய்த பெருமை கொண்டவர் விநாயக பெருமான் என்று சொல்கிறார் இங்கு. விநாயக வணக்கம் செய்யாமல் துவங்கும் எந்த செயலும் தடங்கல் இல்லாமல் முடிவுறாது என்பதற்கு , அவருடைய தந்தை ஆகிய சிவ பெருமானே விதி விலக்கு இல்லை. எனவே தான் எந்தச் செயல் செய்யும் பொழுதும் விநாயகர் பூசை சிறப்பாகச் செய்யப் படுகின்றது. எல்லா வித்தைகளுக்கும் இவரே ஆதாரம் என்றும், விக்கினங்களையும் நிவாரணம் செய்யும் பெருமை கொண்டவர் என்பதும் இந்த வரிகளின் உட்கருத்து.
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
வள்ளி மீது கொண்ட காதலினால், ஒரு கிழவனைப் போலே வேடம் பூண்ட முருகனை, வள்ளியுடன் சேர்த்து வைப்பதற்காக, தினைப் புனத்தில் ஒரு யானையின் உருவம் தரித்து , அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் முருகனை திருமணம் செய்வித்த பெருமை கொண்டவனே என்று போடுகின்றார். அதாவது விநாயகரைப் பூசை செய்தால் சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பதற்கு இந்த வரலாறே சான்று.