Monday, October 1, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - V

அன்னையின் பாதங்கள் அருந்தவத்தால் கிட்டும்
அன்னையின் பாதங்கள் அருமருந்தாகும் கலியில்
அன்னையின் பாதங்கள் யமபயம் அகற்றிடும்
அன்னையின் பாதங்கள் பேரிடர் நீக்கிடும் !

அன்னையின் பாததூளி திருநீறு ஆகிடுமே!
அன்னையின் பாததூளி திருமண்ணும் ஆகிடுமே!
அன்னையின் பாததூளி சிந்தூரம் ஆகிடுமே!
அன்னையின் பாததூளி அனைவரும் தரிப்பரே !

அன்னையின் தூளியால் அரனும் அளித்திடுவான்!
அன்னையின் தூளியால் அயனும் படைத்திடுவான்!
அன்னையின் தூளியால் அரியும் காத்திடுவான்!
அன்னையின் தூளியை அணிந்தான் சௌரியும் !

அன்னையின் அருளால் உலகங்கள் இயங்கிடும்!
அன்னையின் அருளாலே நாமரூபம் உண்டாகும்!
அன்னையின் அருளாலே உலகங்கள் உண்டாகும்!
அன்னையின் அருளின்றி ஆவது ஒன்றுமில்லையே!

அன்னையாய் ஆன்மாவாய் அனைத்துமாய் ஆதியாய்
சர்வாந்தர்யாமினியாய் சதியாய் சர்வேஸ்வரியாய்
கர்வம்  கொண்டவர்க்கு  மிருத்துயுவாய் கலைகளாகி
சர்வமாய் ஒளிரும் லலிதை திருத்தாள் போற்றினேன்.

உலகன்னை உத்தமி லலிதையின் மேல்
செந்தமிழ்  பார்ப்பான் பார்கவ குலத்தோன் ஸ்ரீமணி சொன்ன பாடல்
அன்புடன் பாடும் பத்தர் அவள் அருளை பெருவரே!




நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - IV

சருவேஸ்வரியாகி சகலமாகி சகுணமாகி சாம்பவியாகி
சாம்புவின் துணைவியாகி சகல ஜகத் கனியாகி!
சகலலோகம் படைத்தது அழித்து காத்து மறைத்து
சகலஜீவ ஸம்ரக்ஷிணியாகி ஷண்முகன் தாயாகி

அன்னையாய் ஆன்மாவாய் அளவற்ற ஆனந்தமாய்
அன்னமயாதி கோசங்களாகி  அனைவர்க்கும் தாயாகி
அல்லது உள்ளது என்று அனைத்துமாகி
அடியார் தம்மை காக்கும் பராபரை லலிதையே !

அவள் மேல்வலக்கையில் பாசம் ஆசையாம்
அவள் மேலிடக்கையில் அங்குசம் கோபமாம்
அவள் கோதண்டம் மனத்தின் சொரூபம்
அவள் பஞ்சபாணம் ஐம்பொறிகளின் அடையாளம்

கோடி சூரிய பிரபையுடன் தேவகாரியத்தில்
தேடி வந்த லலிதை ஆத்மஸ்வரூபம்!
ஞானத்தின் வடிவம் அவளே!
மாலுக்கும் அயனுக்கும் அரனுக்கும் அன்னை அவளே!
அன்னையின் அருளின்றி அம்மூவரும் பிணமே!
அவளே அனைத்தும்! அவளே ஆன்மாவும்!
முற்பிறப்பில் புண்ணியம் செய்யாத மாந்தர்கள்
எப்பிறப்பிலும் அடையார் அவள் திருப்பாதங்களை!

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - III

கோடி சூரிய பிரபை கொண்டு
ஓடி அங்கு வந்தாள் லலிதை
நாடி அவளை சென்றனர் தேவர்கள்
பாடி ஆடி கொண்டாடி போற்றினர்!

சாடி அவளும் விதைத்தால் பண்டனை
ஓடி வந்தாங்கு பணித்தனர் தேவர்கள்
தேடி அவள்  திருப்பாதம் பணிந்தனர்
ஓடி ஓடி புகழ்ந்தனர் அன்னையை !

நாடி நரம்புகள் புடைத்தங்கு பண்டனும்
ஓடி பல வித்தைகள் செய்தான்
பாடி ஆடி போரிட்டார் சக்திசேனைகள்
நாடி வந்த தேவர்கள் சரண்புகவே!


ஓடி வந்தன நாராணன்தன் பத்துருவும்
தேடி அவளின் பாத்து விரல்களில்
சாடி அவர்கள் அளித்தனர் அரக்கரை
பாடி ஆடி கொண்டாடினர் தேவர்கள்