Monday, October 1, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - IV

சருவேஸ்வரியாகி சகலமாகி சகுணமாகி சாம்பவியாகி
சாம்புவின் துணைவியாகி சகல ஜகத் கனியாகி!
சகலலோகம் படைத்தது அழித்து காத்து மறைத்து
சகலஜீவ ஸம்ரக்ஷிணியாகி ஷண்முகன் தாயாகி

அன்னையாய் ஆன்மாவாய் அளவற்ற ஆனந்தமாய்
அன்னமயாதி கோசங்களாகி  அனைவர்க்கும் தாயாகி
அல்லது உள்ளது என்று அனைத்துமாகி
அடியார் தம்மை காக்கும் பராபரை லலிதையே !

அவள் மேல்வலக்கையில் பாசம் ஆசையாம்
அவள் மேலிடக்கையில் அங்குசம் கோபமாம்
அவள் கோதண்டம் மனத்தின் சொரூபம்
அவள் பஞ்சபாணம் ஐம்பொறிகளின் அடையாளம்

கோடி சூரிய பிரபையுடன் தேவகாரியத்தில்
தேடி வந்த லலிதை ஆத்மஸ்வரூபம்!
ஞானத்தின் வடிவம் அவளே!
மாலுக்கும் அயனுக்கும் அரனுக்கும் அன்னை அவளே!
அன்னையின் அருளின்றி அம்மூவரும் பிணமே!
அவளே அனைத்தும்! அவளே ஆன்மாவும்!
முற்பிறப்பில் புண்ணியம் செய்யாத மாந்தர்கள்
எப்பிறப்பிலும் அடையார் அவள் திருப்பாதங்களை!

No comments:

Post a Comment