Sunday, August 28, 2016

பெரியாழ்வார் பாடும் கண்ணன் பெருமைகள் - II

சப்பாணிப் பருவம்

அளந்திட்ட   தூணை  அவன்  தட்ட  ஆங்கே
வளர்ந்திட்டு  வாழுகிற  சிங்க  உருவாய்
உளந்தொட்டு  இரணியன்  ஒண்மார்வகலாம்
பிளந்திட்ட  கைகளால்  சப்பாணி
பேய்முலைய  உண்டான சப்பாணி


உட்கார்ந்து கொண்டு, தலை ஆட்டிய கண்ணன், இப்பொழுது சப்பாணி கொட்டுகின்றான் - அதாவது கைகளைத் தட்டிக் கொண்டு விளையாடுகின்றான். அதனை ஆழ்வார் பரவசத்துடன் அனுபவிக்கின்றார். ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொல்ல, தூணை பிளந்து கொண்டு, (அரி) சிங்க உருவாகி வெளியே வந்து , அந்த அரக்கனை,மார்பைப்  பிளந்து குடலை உருவி மலையாகப் போட்டு கொண்டான் திருமால் - அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த கைகளால் சப்பாணி கொட்டுமாறு கண்ணனைக் கேட்டு கொள்கிறார் இந்த ஆழ்வார். என்ன பெருமை பாருங்கள்? உலகை எல்லாம் காக்கும் அந்தப் பரம்பொருள் சின்னக் குழந்தை அகி ஆழ்வாருக்கு தரிசனம் நல்கினர், அதனை  புகழும் பொழுது திருமாலின் பெருமைகளை எல்லாம் நமக்கு கூறுகிறார் ஆழ்வார். சேர்த்து பூதனை தன்னுடைய முலை உண்டு, அவளை வதைத்த வைபவத்தையும் இங்கு சொல்கின்றார் ஆழ்வார்.

தளர்நடைப் பருவம்

ஒருகாலில்  சங்கு  ஒருகாலில்  சக்கரம்  உள்ளடி  பொறித்து  அமைந்த
இருகாலும்  கொண்டு  அங்கங்கு  எழுதினாற்போல்  இலச்சினைபடநடந்து
பெருகாநின்ற  இன்பவெள்ளத்தின்  மேல்  பின்னையும்  பெய்துபெய்து
கருகார்க்  கடல்  வண்ணன்  காமர்  தாதை  தளர்  நடை  நடவனோ


ஆழ்வார் கண்ணனுடைய பக்தியில் திளைத்து   இங்கு அதன் உச்சத்திற்கே சென்று விட்டார் போலும். கண்ணன், தன்னுடைய திருப்பாதங்கள், கயாவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு பாதங்களுக்கு ஒப்பிடுகிறார் ஆழ்வார். ஒரு காலில் சங்கும், மற்றொரு காலில் சக்கரமும் பதித்து அழகான இரு கால்களுடன் , கண்ணன் தளர் நடை நடக்கிறான்.அப்படி நடக்கின்ற பொழுது, அந்த சங்கு சக்கரங்களின் அச்சு, தரையில் படியும் படி அழகு பொங்க சின்னக் கண்ணன் நடக்கின்றான். அதனைக் கண்ட ஆழ்வார் மற்றும் ஆயர்கள் நெஞ்சத்திலே பேரின்ப வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகின்றது. அத்துனை பெருமைகள் வாய்ந்த, நம்முடைய சின்னக் கண்ணன் - மன்மதன் என்று சொல்லப் படும் காமனுக்குத் தந்தை, கரிய நிறம் கொண்ட மேகம் மற்றும் நீலக் கடல் வண்ணம் கொண்ட எம்பிரான் மெல்லத் தளர் நடை நடக்க மாட்டானோ? என்று தம்முடைய பக்தியையும், எம்பெருமானின் பெருமைகளையும் இங்கு நமக்கு எல்லாம் சொல்லுகின்றார் ஆழ்வார்.

அச்சோப் பருவம்

சின்னக் கண்ணன் வளர்ந்து மெல்ல நடக்கும் பருவம் எய்தி விட்டான். இப்பொழுது அவன் வந்து தம்மை அணைத்துக் கொள்ளும் பருவம் வந்ததனை, ஆழ்வார் கொண்டாடுகின்றார்.

மிக்க  பெரும்புகழ்  மாவலி  வேள்வியில்
தாக்கதிதன்றென்று  தானம்  விளக்கிய
சுக்கிரன்  கண்ணைத்  துரும்பால்  கிளறிய
சக்கரக்  கையனே  அச்சோவச்சோ
சங்கமிடத்தானே  அச்சோவச்சோ


இங்கு மஹாபலி சக்ரவர்த்தியின் வேள்வியில், பகவான் வாமனனாக மூன்றடி மண் கேட்ட வைபவத்தைக் கூறுகின்றார் ஆழ்வார். வந்திருப்பது எம்பெருமானே என்று தெரிந்து கொண்ட அசுரர் குருவாகிய சுக்ராச்சாரியார், தானம் கொடுக்க நீர் வார்க்கும் ஜல பாத்திரத்தில் (கிண்டி) ஒரு வண்டு உருவம் கொண்டு,  நீர் விழாதபடி அடைத்துக் கொண்டார். அதனை, அறிந்த எம்பருமான், ஒரு தர்பைப்புல்லால், குத்தி விட அவரது கண்களில் ஒன்றை இழக்க நேரிட்டது. அந்த சம்பவத்தைச் சொல்லி, வலது கையில்  சக்கரமும், இடது கையில் சங்கும்  கொண்டவனே, அச்சோ - என்று என்னை  வந்து அணைத்துக் கொள் என்கிறார்.

புறம் புகுதல் / முதுகைக் கட்டிக்க கொள்ளும் பருவம்

நாந்தகம்  ஏந்திய  நம்பிசரனென்று
தாழ்ந்த தனஞ்சயர்க்கு ஆகி   தரணியில்
வேந்தர்கள்  உட்கா  விசயன்  மணித்திண்தேர்
ஊர்ந்தவன்  என்னைப்  புறம்  புல்குவான்  
உம்பர்  கோன் என்னைப்  புறம்  புல்குவான்


பாடுதற்குத் தமிழும், அனுபவித்தற்கு குட்டி கண்ணனும், பக்தி நிறைந்திட்ட மனதும் அருள பெற்ற ஆழ்வார் கண்ணனைப் பலவாறாக அனுபவிக்கின்றார். இப்பொழுது சின்னக் கண்ணனனை வந்து தம்முடைய முதுகைக் கட்டிக்கொள்ளும்படி அழைக்கின்றார் ஆழ்வார். நந்தகம் என்னும் வாள்  ஏந்தும்  வீரன் ஆகிய கண்ணன், அரசர்களுக்கு எல்லாம் அரசனாகிய கண்ணன், தனஞ்சயன் என்னும் அர்ஜுனன் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த விஜயன் என்னும் அர்ஜுனனுடைய தேரோட்டியாகப் பணி புரிந்தான். அப்படிப் பட்ட சௌலப்யம் (அடியாருக்கு சுலபமாக இருத்தல்) நிறைந்த எம்பெருமான் வந்து என் முதுகைக் கட்டிக்கொள்ள மாட்டானோ? தேவர்களுக்கு எல்லாம் தலைவன் வந்து என்னுடைய முதுகைக் கட்டிக்கொள்ள மாட்டானோ? என்று கூப்பிடுகின்றார் ஆழ்வார்!

மெச்சூது 

காயும்  நீர்ப்புக்கு  கடம்பேரி
காலியான  தீய  பணத்தில்  சிலம்பார்க்க  பாய்ந்தாடி
வேயின்  குழலூதி  வித்தகனாய்  நின்ற
ஆயன்வந்து  அப்பூச்சி  காட்டுகின்றான்
அம்மனே  அப்பூச்சி  காட்டுகின்றான்




இங்கு பகவன் காளிங்க நர்த்தனம் ஆடிய கட்சியை  மிகவும் அழகாக வர்ணிக்கின்றார் ஆழ்வார். அதாவது , யமுனை நதியிலே , நடுவிலே தன்னுடைய கொடிய பணங்கள் (படங்கள்) மற்றும் தலையைத் தூக்கி ஆடிக்  கொண்டும், நஞ்சைக் கக்கிக் கொண்டும் இருந்த அந்தக் காளிங்கன் மீது ஏறுவதற்காக , கடம்ப மரத்தின் மீது ஏறி, அங்கிருந்து  தாவினார் - காளிங்கன் தலை மேல். அப்படி ஏறி, அவனுடைய வாலைத் தன் கைகளிலே பிடித்துக் கொண்டு பகவான் நர்த்தனம் புரிந்தான் - என்ன அருமை பாருங்கள். 8 வயது பாலகன் , குழல் ஊதுவதில் மட்டும் அன்று , நாட்டியம் ஆடுவதிலும் கெட்டிக்காரன். அத்தனை பெருமைகள் வாய்ந்த எம்பெருமான், பூச்சி காட்டுகின்றான் என்று கண்ணனை மெச்சிக் கொள்கின்றார் ஆழ்வார் இங்கு.

No comments:

Post a Comment