எந்தாய் மணிவயிற்றில் வந்துதித்த மாணிக்கமே! என்னன்பு வளர்த்த என்தாயே!என்னை சிங்காரித்து சீவி அழகு பார்த்த என்னன்புத் தெய்வமே !
என்னகத்தில் என்றும் இருந்து என்னை வழிநடத்தும் என்னிதய தெய்வமே! ஒளி சூழ் திருமுகம் பெற்ற மாதர்க்கரசியே!
கற்பக தருவும் காமதேனுவும் வேண்டும் என்றெனக்குஇவ்வுலகில் நின்னை என் தமக்கையாய் செய்தானோ நான்முகனும் !
கடைக்கண்ணால் நோக்கி என்னை கருணை செய்யும் காமாட்சி தன்னுருவம் நின்னுருவம் தன்னில் கண்டேனே!
கற்பகக் களிறும் காமதேனுவும் காமாட்சி தன் கடைக்கண்ணும் ஒருசேர பெற்ற என்னக்கா - என்சொல்வேன் நின் பெருமை!
பொறுமையில் பூமியாய் பெருமையின் சிகரமாய் அருமையில்என்தாயாய் ஒப்பில்லாப் புகழ்பெற்று விளங்கும் என்னக்கா!
என்சொல்வேன் நின் பெருமை! ஏழ்பிறப்பிலும் என்னக்காவாய் வாய்த்தல் வேண்டும் என்று நான்முகனை கோரினேன்!
செந்தாமரை அமர்ந்த திருவே! வெந்தாமரை அமர்ந்த வாணியே!மலையரசன் மகளே ! என்னக்கா ! என்னுள் இருந்து எனையாளும் அன்னையே!
இனி வேறில்லை வார்த்தைகள் என்நாவில் நின்பெருமை பாடிடவே!சந்திர சூரியர் இருக்கும் வரையில் வாழும் நின் பெருமை!
No comments:
Post a Comment