என்னிதயம் வாழும் ஐயன் உலகாசான் இருவருமே
சமாதியாய் அமர்ந்துலகம் ஈரேழும் அருளுமிடம்
தாயும் பிள்ளை போலமர்ந்து நன்மை பல செய்யும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!
அனுடத்தில் உதித்த எங்கள் உலகாசான் தானே வந்து
அவிட்டதில் அவனிவந்த அவர்சீடர் உடனமர்ந்து
சமாதியாய் பிரமத்துள் இரண்டறக் கலந்திருந்து
அடியார்கள் அனைவருக்கும் அருள்மாரி பொழியும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!
மனமுகநாத ஆசானை மஹாபெரியவா என்பார்
அவர்தான் அன்பு சீடரை புதுபெரியவா என்றழைப்பர்
தாயும் பிள்ளை போலமர்ந்து தரணி காக்கும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!
செய்தற்கரிய செய்வோரே பெரியார் என்னும்
வள்ளுவன் தன வாக்கை நிரூபித்த ஆசான்மார்
சமாதியாய் தாமமர்ந்து அருளால் எம்மை ஆளும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!
கருணைக் கடலாம் (ஆதி) சங்கரனும் அவனி காக்க
அத்துவிதம் தாபித்து மடங்கள் ஈரிரண்டு நிறுவி
தாமே வந்தமர்ந்து அருளாட்சி செய்கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!
எங்களாசான் நாமம் சொல்லி காலையிலே துயிலெழுவேன்
அவன்தான் நாமம் சொல்லி தினமும் பள்ளி கொள்ளுவேன்
அருளும் பொருளும் சேர்த்துநல்கும் புண்ணியர் வாழும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!
குருநாதன் நாமங்கள் சொல்லி அவன் மகிமைகள்
பாடுந்தோறும் கண்ணீர் பெருகும் என் நயனத்தில்
தீந்தமிழில் நாயேன் செய்த பாடலேற்று மானிடர்கள்
அனைவருமே நன்மைபெற அருளவேண்டும் எங்குருவே!
No comments:
Post a Comment