பாரதம் எங்கும் திரிந்து வேதமார்க்கம் பரப்பிய நின் சீர் கழல்கள் வாழி!
பரமஹம்ச பரிவிராஜக வேடம் பூண்டு நின் அரையில் ஒளிரும் காஷாயம் வாழி!
தத்துவமஸி என்ற மஹாவாக்யம் சொல்லும் நின் வலக்கை சின்முத்திரை வாழி!
மாண்டூக்யம் சொல்லும் பிரமத்தைக் காட்டும் உந்தன் ஒற்றைக்கோல் வாழி!
துளசி மணியும் உருத்திராக்ஷமும் மின்னும் நின் சங்கை ஒத்த கழுத்து வாழி!
காலாக்கினி உருத்திர உபநிடதம் போற்றும் திருவெண்ணீறு ஒளிரும் நின் நெற்றி வாழி!
கருணா பூரிதமாய் தாமரைக் காந்தி மின்னும் நிந்தன் நயனங்கள் வாழி!
அமுதூறும் குடமாய் அம்ருத வாக்கை வர்ஷிக்கும் ஆகாசமாய் அருள் வழங்கும் நிந்தன் வாயும் வாழி!
நிந்தன் குரு உபதேசம் பெற்று உலகுய்ய பிரமன் தந்த நின் திருக்காதுகள் வாழி!
பதுமராகக் கண்ணாடி போல் பதும காந்தி ஒளிரும் கின் திருக்கன்னங்கள் வாழி!
தெய்வீக நறுமணம் வீசும் புகையும் மலர்களும் நித்தமும் பூஜையில் அர்ப்பித்து நுகரும் நின் நாசிகள் வாழி!
பக்தர்க்கபயமாய் கலியில் பிறப்பிறப்பு மூப்பு பிணி என்னும் உரோகங்கள் அகற்றும் கருணைக்கடலாய் வேதமார்க்கம் விளங்க எண்ணற்ற தியாகங்கள் செய்து உதிக்கும்
பரிதியின் காந்தி மின்னும் நின் பொற்றாமரை முகம் வாழி!
ஆதி சங்கரனும் சந்திர சேகரனும் தம் பாத பத்மங்கள் வைத்தருளிய நின் உச்சந்தலை வாழி!
எண்ணற்ற பக்தர்க்கும் விஜயனுக்கும் அருள் செய்து இப்பாரும் எப்பாரும் உய்ய இத்தரணியில் வந்துதித்து இருமை என்னும் இருள் நீக்கி ஒருமை என்னும் ஆன்ம வித்தை அருளி அறியாமை மருள் நீக்கி மாண்டூக்கியம் சொல்லும் தத்துவத்தை உலகுக்கருளிய சத் குருபரனே !
கூப்பிய கைகளுடன் பிறந்து இரிக்கு வேதத்தில் வித்தகனாகி பார்ப்பன தருமமும் பாலித்து பத்தொன்பதாம் வயதில் நான்காம் ஆச்சிரமம் பூண்டு செயற்கரிய செய்வார் பெரியார் என்ற வள்ளுவன் வாக்கை நிலை நாட்டிய அருட்கடலே!
கன்னடரும் களி தெலுங்கரும் மெச்ச தென் தமிழகத்தின் காமகோடி பீடத்தில் அமர்ந்து அருளால் உலகாண்ட புண்ணியனே! வட-கிழக்கு மாநிலத்தை மிலேச்சரிடம் இருந்து மீட்டு வைதிக மார்க்கம் பரப்பி , அதனால் வெளிநாட்டவர் சதியாலும்
உள்நாட்டவர் துர்மதியாலும் சிறைக்கு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு தீபாவளி அன்று சிறைக்குச் சென்ற தியாகச்செம்மலே! விருப்பு வெறுப்பற்ற நிஜ வாழ்க்கை வாழ்ந்து சௌரமான மாசியில் பிரதோஷத்தன்று பிரமத்துடன் நீ கலந்தாய் !
என்னத்தனாய் அம்மையாய் ஆசிரியனாய் பிரவாய்ப்பிணி தீர்க்கும் என்னிறைவனாய் அருளுரைகள் வழங்கும் நண்பனாய் அத்துவிதம் சொல்லி உலகை உய்விக்க வந்த இரட்சகனாய்
எந்தன் உள்ளத்தில் என்றும் குடியிருக்கும் எந்தன் குருமணியே!
நின் புகழைப்பாட ஓராயிரம் நாவை எனக்கு படைத்திலனே அந்த நாமகள் கேள்வன்! வாழ்க நிந்தன் பெருமை! வளர்க்க நிந்தன் திருப்பணிகள்!
No comments:
Post a Comment