நம்முடைய ஒளவைப் பாட்டி நமக்கு அளித்த முத்துக்களில், மூதுரை என்னும் இந்த இலக்கியம் மிகவும் அருமை ஆனது. அதில் சில முத்துக்களை இங்கே காண்போம்.
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
திரிந்தாலும் பால் சுவை மாறாது, அதே போலே நம்முடன் நட்பு கொள்ள விருப்பம் இல்லாதவர் என்ன செய்தாலும் நட்பு கொள்ளார். சங்கைத் தீயில் சுட்டாலும் தன்னுடைய வெண்மை நிறம் மாறாது - அதே போல் தம்முடைய பெருமைகள் கெட்டாலும் நல்ல குலத்திலே பிறந்தவர்கள் (மேன் மக்கள்) எப்பொழுதும் மேன்மக்களே.
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் .
எப்படி அல்லி மலரின் காம்பின் நீளம் நீர் மட்டத்தின் உயரத்தைப் பொறுத்து இருக்குமோ, அதே போல் ஒருவனுடைய ஞானம் , அவன் கற்ற நூல்களின் அளவைப் பொருத்துத் தான் இருக்கும். முற்பிறவாகில் செய்த புண்ணியத்தைப் பொறுத்தே ஒருவனுடைய செல்வம் விளங்கும் - அதே போல், ஒருவன் பிறந்த குலத்தின் அளவே, அவனுடைய குணமும் இருக்கும்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
எப்படி நெல்லுக்குப் பாய்ச்சப்ப படும் நீரானது , வயலில் உள்ள புல்லுக்கும் பாயுமோ அதே போல், இந்த உலகில் உள்ள நல்லவர்களுக்காகப் பெய்யும் மழை , உலகில் உள்ள அனைவருக்கும் போய்ச் சேரும்.
மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.
பெரிய மடல்களை உள்ள தளம் பூ, மிகவும் சிறிய மலரான மகிழ மலரின் மணத்தைக் கொண்டு உள்ளது. அதே போல் உடலால் சிறியார் என்று எவரையும் எண்ண கூடாது - அவர்களுக்குள்ளே மிகும் நுண்ணிய அறிவு மறைந்து இருக்கும். கடல் எவ்வளவு பெரியதானாலும், அதன் நீரைக் குடிக்க இயலாது - ஆனால் அதன் அருகே உள்ள சிறிய உற்று நீர் ஆனது குடிக்க உகந்ததாக இருக்கும்.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கல்வி.
வானத்தில் மழை வரக் கண்டு தன்னுடைய அழகான இரக்கைகளை விரித்துக் கொண்டு ஆடுவதைக் கண்ட வான்கோழி தன்னுடைய அசிங்கமான சிறகுகளை விரித்து ஆடத் துடங்கினதாம். அதே போல் மூர்க்கர்கள்(கல்லாதவர்) அதாவது நல்ல விஷயங்களைத் தன்னுள் வைத்துக் கொள்ளாமல், கெட்டதை கிரஹித்துக்கொண்டு விளங்கும் அறிவிலிகள் கற்ற கல்வி ஆனது - வான்கோழியின் நடனத்தைப் போன்றது ஆகும்.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
ஒரு குளத்தில் உள்ள நீரானது வற்றிப் போகுங்கால், அக்குளத்தை விட்டு வெளியேறும் கொக்கினத்தை போன்றவர் அல்லர் உறவினர்கள். ஆனால் அக்குளத்திலேயே இருந்து அந்த வறட்சியை அனுபவிக்கும் அல்லி மற்றும் நெய்தல் மலர்ச் செடிகள் போன்றவர்களே உண்மையான உறவினர்கள்.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என்று எண்ணி இயக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய உடலில் பிறந்த பெருநோய் நம்மைக் கொல்லும் - ஆனால் எங்கேயோ இருக்கும் மலை, அந்த நோய்க்கு மருந்தை நல்கும். அந்த மலையைப்போலே , நமக்குச் சொந்தம் அல்லாதவர்கள் நமக்குப் பேருதவியைச் செய்வார்கள்.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.
கல்லாதவர்களுக்குக் கற்றவர்களுடைய சொல் எமனாக இருக்கும்.
தீய மனிதர்களுக்கு தர்மம் எமனாக இருக்கும்.
வாழை மரத்திற்குத் தன்னுடைய குலையே எமனாக அமையும்.
வீடிற்ற்கு அடங்காத பெண் அந்த வீட்டிற்கு எமனாக விளங்குவாள் .
நற்றாமரைக் குளத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
நல்ல அன்னப் பறவை, தாமரைக் குளத்தைச்சென்று சேர்வதைப்போலே, கற்றவர்கள் கற்றவர்களுடனே சென்று சேர்வர். எப்படிப் பிணம் தின்னும் காக்கைகள் சுடுகாட்டைச்சென்று சேருமோ, அதே போல் தான் மூர்க்கர்கள் மூர்க்கர்களை செண்று அடைவார்கள்.
No comments:
Post a Comment