Monday, March 27, 2017

தமிழ் வளர்த்த மஹான் - அருணகிரிநாதர்

திருப்புகழ் 1307 அகரமுமாகி



அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

இந்த பாடலிலே அருணகிரிநாதர் இரண்டு தலங்களை போற்றுகின்றார். பழமுதிர் சோலை மற்றும் கதிர்காமம். ஆழமான வேதாந்த கருத்துக்கள் நிறம்பிய பாடல்.

அகரம் என்னும் பரப்பிரமமமாகி, அதிபன் என்னும் ஈஸ்வரனாகி, கூடுதலாக, உள்ள மாயை என்னும் பிறகுருதி என்னும் இயற்கை ஆகி , இந்த ஆன்ம வாக ஆகியவனே!
பிரமன், விட்ணு, சிவன் என்று முத்தொழில் புரியும் தெய்வங்கள் ஆகி, அவர்க்கும் மேலான சர்வேஸ்வரனாக ஆகி! இந்த உலகங்கள் எல்லாம் ஆகி, பஞ்ச பூதங்கள் ஆகி, இனிமையான தமிழாகி வருபவனே!
இந்த பூமியில் என்னை போன்ற எளியவனும் வாழ, மயில் மீது ஏறி ஓடி வர வேண்டும்!
வேள்விகளில்  வழிபடக்கூடியவனாகிய இந்திரனுக்கு இன்பம் பயக்கும் முருகா! நீ தான் கதிர்காமத்தில் வேடன் தரும் பூசையை ஏற்கின்றாய்!
பலவாறாக, ஜதி இட்டு கொண்டு நடனம் ஆடும் மயில் மீது வரும் முருகக் கடவுளே! நீ தான் பழமுதிர்சோலையில் உறையும் தெய்வம்!

அப்பா என்ன ஞானம் என்ன  பக்தி? இவருக்கு ஈடு யாரேனும் வர முடியுமா? முருகனே முதல் வரி எடுத்துக் கொடுத்து பாடல் பாடிய பெருமை கொண்டவர்! நம் அருணகிரிநாதருக்கு ஈடு இணை எவருமே இல்லை. தமிழ் கடவுளான முருகனை, அந்த முருகனே அடி எடுத்து கொடுக்க, தெள்ளு தமிழிலே பாடி அனுபவித்த மஹான். என்ன பெருமை பாருங்களேன்...

No comments:

Post a Comment