Monday, August 13, 2018

தொல்காப்பியம் என்னும் நூல்....

    தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ்மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழைமையும் பெருமையும் வாய்ந்த இயல் நூலாகும். பண்டைக்காலத்து தமிழ்ப் பழங் குடிகளுள் ஒன்றான காப்பியக்குடியிற் பிறந்து சிறந்தோர் ஒருவராற் செய்யப்பட்டமையின், இஃது இப்பெயர் பெற்றது. காப்பியஞ் சேந்தனார் என்று பெயர்கொண்ட ஒரு புலவர் நற்றிணையில் ஒரு செய்யுளைப் பாடினோராகக் காணப்படுகின்றார். காப்பியாற்றுக் காப்பியனார் என்பது பதிற்றுப்பத்துள் ஒரு பத்தைப் பாடிய புலவர் பெயர். இவற்றாலும் காப்பியம் என்பது தமிழ்நாட்டோடே தொடர்புற்றுத் தமிழ்க்குடியைக் குறிப்பதாகவே அறியப்படும். தொல்காப்பியர் தமிழ்முனியாகிய அகத் தியர் இயற்றிய அகத்தியத்தை நிலைகண்டுணர்ந்தே இந்நூலைச் செய்தனர். இதை,

      "ஆனாப் பெருமை அகத்திய னென்னும்
      அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல்
      பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
      நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்."

    எனப் பன்னிருபடலப் பாயிரம் கூறுமாற்றால் தெளிக. இவர் சங்கம் வளத்த முதற்குடியிற் றோன்றிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து இந்நூலை அரங்கேற்றின ரென்பதும், அதங்கோட்டாசான் என்ற புலவர்பெருமான் முன் அது நிகழ்ந்த தென்பதும் இந்நூற் பாயிரத்தால் தெள்ளிதின் உணரப்படும்.

    இவர் காலம் வடமொழி வியாகரணம் இயற்றிய பாணினியின் காலத்துக்கு முற்பட்ட தென்பது பெரிதும் கருதத் தக்கது. தொல்காப்பியப் பாயிரத்திலேயே "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுகின்றார். வட மொழிக்கு ஐந்திரம் என்ற இலக்கணமே முற்பட்டிருந்த தென்பதும், அதற்குப் பின்னேயே பாணினீயம் தோன்றிய தென்பதும் வடநூலாரும் ஒப்பும் உண்மையாகும். ஆதலின் தொல்காப்பியம் பாணினியின் வடமொழி வியாகரணத்துக்கு மிகவும் முற்பட்ட தென்பது தெளிந்த துணிபன்றே? "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுதற்குக் காரணம் என்னை எனின், தமிழ்மொழிக்குப் பேரிலக்கணம் செய்யப் புகுந்த இவர், அக்காலத்துச் சிறந்து விளங்கியிருந்த மற்றொருமொழியான வடமொழி இலக்கண வமைதியையும் நிலைகண்டுணர்ந்து இருமொழி அமைதியையும் அறிந்தமைந்த உரவோர் ஆயதைத் தெரிவிக்கவேண்டி என்க. மற்று இவர் வடமொழி இலக்கண மறிந்தமை கூறப்பட்டதன்றி, அகத்தியம் முதலிய தமிழிலக்கண நூலுணர்ச்சி பாயிரத்தில் குறிக்கப்பட வில்லையெனின், அப் பாயிரமே முற்பகுதியில் 'முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்- புலந்தொகுத்தோனே போக்கறு பனுவல்' எனத் தெள்ளிதின் உரைத்தமையால், தங்காலத்துக்கு முற்பட்ட தமிழிலக்கண நூல் முழுவதும் அவர் கண்டவர் என்பதும், அந் நூற்பொருள் முழுவதையும் தாம் முறைப்படுத்தினர் என்பதும், விரிந்து கிடந்த அந்நூற்பொருளை எல்லாம் தம் அஃகியகன்ற அறிவால் தொகுத்துக் கூறினர் என்பதும், ஆதலின் இங்ஙனம் செய்த நூல் எவ்வகைக் குற்றமுமற்று விளங்குவதென்பதும் தெளிய உணர்த்தப்பட்டன.

    நூல் என்பது இக்காலத்து இலக்கண இலக்கியங்களை யெல்லாம் குறிப்பினும், முற்காலத்து இலக்கண நூலையே வரைந்து குறித்ததாகும். நச்சினார்க்கினியரும் 'முதுநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசைநுணுக்கமும்" என உணர்த்தியமை காண்க. பிற்காலத்துப் பவணந்தியால் செய்யப்பட்ட நன்னூலின் சிறப்புப் பாயிரத்தில்

      ".......முன்னோர் நூலின்
      வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்."
    என்று கூறப்படுகிறது. ஈண்டும் நூல் என்றே இலக்கணத்தைக் குறித்து, நன்னூல் அம் முந்துநூற்கு வழிநூலாகச் செய்யப் பட்டதென்று உணர்த்தப்பட்டமை காண்க. தொல்காப்பியத்துக்கு, முதல்நூலாகச் சிறந்த இலக்கணமான அகத்தியம் சுட்டப்படாமை போலவே, நன்னூற் பாயிரத்தும் அதற்கு முன்னைய சிறந்த இலக்கணமான தொல்காப்பியம் சுட்டப் படாமைகாண்க. மேலும் தொல்காப்பியப் பாயிரத்தின் முற்பகுதியில்,

      வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
      எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

    என இலக்கியங்க ளெல்லாம் செய்யுள் என்று குறிக்கப்பட்டுப் போந்தமையால், நூல்என்பது இலக்கணத்தையே வரைந்துணர்த்திற்றென்பது தெளிவு.

    ஆகவே, உலக வழக்கை யுணர்ந்து, பண்டைத் தமிழிலக்கியங்களை யாராய்ந்து, எழுத்து, சொல், பொருள் என்பவற்றின் அமைதிகளை யுணர்ந்து, சிறந்த அகத்திய முதலாய இலக்கணங்களையும் தெளிந்து, இந்நூலைச் செய்தனர் தொல்காப்பியர் என்பது தெளியப்பட்ட உண்மையாம்,.

    எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றும் மூன்றதிகாரத்தால் கூறப்படுகின்றன. எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் அமைதியை விளக்குவன. பொருள் அத்தமிழ்
    மொழி வழக்கிற்கு நிலைக்களனாயுள்ள தமிழரது ஒழுக்கத்தை எடுத்துக் காட்டுவதாகும்.

    இப்பொருளதிகாரம், தமிழரே உலகத்தோற்றத்தில் முதற்கண் நிலைபெற்ற பண்டைப் பெருங்குடியின ராவரென்பதைத் தெளிய உணருமாறு உரைத்துச் செல்கிறது. குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலப்பகுப்பு மக்கள் வாழ்க்கையிடம் படிப்படியாக மாறிய முறையையே தெரிவிப்ப தாகுமன்றே? உலகத்தே முதலில் மக்கள் மரஞ் செறிந்த மலையிடத்தேயே தோன்றி, எதிர்ப்பட்ட விலங்குகளைக் கொன்றுண்டு வாழ்க்கை நடாத்திப், பின் காலப்போக்கில் முல்லை நிலத்தே வந்து தங்கி, வரகு முதலியன வித்திப் பயன்கொண்டு வாழ்ந்து பின் மருத நிலத்தே ஆற்று நீரைத் தேக்கிப் பயன் கொண்டு, மேம்பட்ட உழுதொழில் செய்து வாழ்ந்து, பின் பல்வகைத் தொழிலும் பெருக்கி, நெய்த னிலத்தே பட்டின மமைத்துக் கடல் கடந்து நாவாய் மூலம் சென்று வாணிகம் புரிந்து மேம்பாடுற்றமை வரலாற்றுண்மையன்றே?

    கல்தோன்று மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி. (புற-வெ-2-14) என்று கூறிக் குறிஞ்சி நிலத்தையே மக்கட்டோற்றத்திற்கான முதலிடமாகக் குறிப்பிட்டமையும் காண்க.

    மக்கட்பெருக்கத்துக்குக் காரணமாயிருந்த இத் தமிழ்க் குடியினரிடத்தே, அத்தன்மைக் கேற்பக் காதலும் வீரமும் சிறந்திருந்தமையும், அவ்விரண்டையும் நுனித்தறிந்து
    வரையறை செய்து நன்முறையில் ஒழுகிவந்ததையுமே பொருளதிகாரம் விரித்துப் பேசுவதாகும்.

    காதலொழுக்கத்தை நுனித்தறிந்த தமிழர், அதைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்றே வகையாக வகுத்துரைத்தனர். இவை எந்நிலத்தும் நிகழுமாயினும் நாடகவழக்கினும் உலகியல்வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கத்தால், இடம் காலம் முதலியவற்றுட்படுத்துக் கூறப்பட்டன.

    வீரவுணர்வு மிகுந்த தமிழர், அவ்வீரத்தை அறநெறி வழுவாது ஓம்பிப் போற்றிய வகையும், அவர்கள் வீரத்தின் மேம்பாடும் வகைப்படுத்தி உரைக்கப்பட்டன.

    பொருளதிகாரம் இவற்றை அகவொழுக்கம், புறவொழுக்கம் என்று கூறுகிறது. இவற்றைச் சிறந்தெடுத் துணர்த்துவதே அகத்திணை இயல், புறத்திணை இயல் என்ற இரண்டுமான இப் பொருளதிகாரப் பகுதியாம். அகவொழுக்கமாயிற்று, இரு பாலாருள் ஒருவரோடொருவர் மனமொன்றிய காதலொழுக்க மாதலின். புறவொழுக்கமாயிற்றுச், சிறப்பாகப் பிறரின் மாறு பாட்டு அறமும் பொருளும் கருதித் தோன்றும் போரொழுக்க மாதலின். அகவொழுக்கமல்லாத பிறவொல்லாம் இப்புறவொழுக்கத்தில் அடங்கும்.

    அகத்திணை இயல், தமிழர் வாழும் நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலை) எனப் பகுக்கப்படு மென்பதும் அவ்வந்நிலத்தில் இன்னின்ன காலங்கள் சிறந்தன வென்பதும், அவ்வந்நிலத்து வாழ் மக்கள் குறவர், இடையர், உழவர், பரதவர், எயினர் எனப்படுவர் என்பதும். அவ்வந்நிலத்துத் தெய்வம், உணவு, விலங்கு, பறவை, மரம், பறை, செய்தி, யாழ் முதலியன வேறுவே றென்பதும், மக்கள் காதலொழுக்கத்தில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னுமைந்தும் நிகழுமென்பதும், மக்கள் கல்வி, பகை தூது, பொருள் என்பன பற்றில் காதலியைப் பிரிவரென்பதும், பிரிவின்கண் நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன் என்போர் கூறுமுறை இவை என்பதும், காமஞ்சாலா இளமையோள் மாட்டுக் காதல்புரியும் கைக்கிளையினியல்பு, கழிபெருங் காமுகராய் ஒழுகும் பெருந்திணை இயல்பு இவை என்பதும் கூறுகின்றது.

    இனிப் புறத்திணை இயல், பகையரசர் நாட்டிலுள்ள பசுக்களுக்குத் தீங்குவராமற் காத்தல் அறமெனக் கருதிப், போர் கொண்டெழுதற்கு முன் வெட்சிப்பூச் சூடிச் சென்று, அப்பசுக்களுக்கு ஓரிடையூறும் உண்டாகாவண்ணம் கவர்ந்து வரும் முறைகளும், பகைவர் அரணை அடைந்து உழிஞைப்பூச் சூடி அவ்வரணிடத்து நின்று போருடற்றி, அரணைத் தம் வசப்படுத்தும் முறைகளும், மாற்றாரும் எதிர்ந்து வந்துழித், தும்பைப்பூச் சூடி அவரோடு போர்புரியும் முறைகளும், வென்றவழி வாகைப் பூச் சூடி வெற்றியைக் கொண்டாடும் முறைகளும் இவையன்றிப் பார்ப்பார், அரசர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என்போர் சிறந்து மேம்படும் முறைகளும், நிலையா உலகத்தியல்பும், பிறர் மேம்பாட்டைப் புகழ்ந்து பாடும் முறையும் கூறுகின்றது.

    காதலைத் தூயமுறையில் நுனித்தறியும் பேருணர்வுடன் உலகில் தோன்றிய பழங்கால மக்கட் கூட்டத்தினரிடையே மேம்பட்டுத் தோன்றுதற்கான குணமாய வீரவுணர்வும் வாய்ந்த நனிநாகரிகர் தமிழ்மக்கள் என்பதை யுணர்த்தும் இத் தொல்காப்பியம், தமிழரின் பழம் பண்பாட்டை யுணர்த்திய ஒரு தனிப்பெரு நூலாயது பெரிதும் உணரத்தக்கது.

No comments:

Post a Comment